திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்ட நிலையில் இன்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் திமுக தலைவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
எமர்ஜென்சி காலத்தில் மிசாவில் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலில் முக ஸ்டாலின் பெயர் இல்லை என்றும், அவர் கைது செய்யப்பட்டது வேறொரு வழக்கில் என்றும், சமீபத்தில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி ஒன்றில் கூறினார். இதனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு ஊடகம் ஆதாரத்துடன் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது
அந்த ஊடகத்திற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காத திமுகவினர், நேற்று அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டம் செய்தனர். அவரது வீட்டின் முன்னால் நூற்றுக்கணக்கான திமுகவினர் குவிந்து அமைச்சரின் உருவ பொம்மைக்கு பாடை கட்டி எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டு அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திட தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் முக ஸ்டாலினின் இந்த வேண்டுகோளுக்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் நன்றி தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ஸ்டாலின் பற்றி நான் பேசியதில் சில தவறான புரிதல்கள் ஏற்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து முதல்வரிடம் விளக்கம் அளித்துள்ளதாகவும், தனக்கு எதிரான போராட்டத்தை திமுகவினர் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.