இன்னும் இரண்டே நாள் தான் கெடு!ஜனாதிபதி ஆட்சி என பாஜக மிரட்டல்!
மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து அதன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மூன்று வாரங்கள் ஆகியும் இன்னும் அம்மாநிலத்தில் புதிய ஆட்சி அமையவில்லை. பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு எம்எல்ஏக்களை கைவசம் வைத்திருந்த போதிலும், இரு தரப்பிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புதிய ஆட்சி இன்னும் அமையாமல் உள்ளது. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தர வேண்டும் என சிவசேனா பிடிவாதம் பிடிப்பதும், அதற்கு பாஜக மறுத்து வருவதும் புதிய ஆட்சி அமையாததன் காரணமாக உள்ளது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா போட்ட திட்டம் பலிக்கவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் தான் எங்களை அமர மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்றும் சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு இல்லை என்றும் சரத் பவார் வெளிப்படையாகக் கூறி விட்டதால் சிவசேனாவுக்கு தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது
மேலும் மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டசபையில் காலம் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. அதற்குள் புதிய ஆட்சி அமைக்கப்படாவிட்டால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிவசேனாவின் பிடிவாதத்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்டு மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டால் கிட்டத்தட்ட பாஜகவின் ஆட்சி போலவே இருக்கும் என்பதால் இன்னும் இரண்டு நாட்களில் ஒரு முடிவை எடுக்க சிவசேனா முன்வர வேண்டும் என்று அரசியல் கட்சி ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிவசேனாவின் முதலமைச்சர் பதவி பேராசையால் அக்கட்சி மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளுக்கும் அக்கட்சிகளும் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது