Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடும் அதிர்ச்சியில் கமல்! மேலும் ஒரு முக்கிய வேட்பாளருக்கு தொற்று உறுதியானதால் பதற்றம்!

Kamal

Kamal

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் அனலாய் சூடு பிடித்துள்ள நிலையில் மறுபுறம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன் முதன் முறையாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார். கணிசமான வாக்குகளை அள்ளிவிட வேண்டும் என்பதற்காக பார்த்து, பார்த்து பிரபலமான வேட்பாளர்களை களமிறங்கியுள்ள கமல் ஹாசனுக்கு அடுத்துடுத்து கொரோனா வைரஸால் அதிர்ச்சியான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

Kamal

ஐஏஎஸ் பதவியிலிருந்து விரும்ப ஓய்வு பெற்று சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைத்த சந்தோஷ் பாபு வர உள்ள சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட உள்ளார். சந்தோஷ் பாபு வேட்புமனு தாக்கல் செய்து இரு தினங்களே ஆன நிலையில் கடந்த 18ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சந்தோஷ் பாபுவிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எனது வேளச்சேரி வாக்காள பெருமக்களுக்கு எனக்கு கொரோனா பாசிட்டீவ் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நான் எப்படிப்பட்ட துரதிர்ஷ்டசாலி, உங்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், வாக்குகளை பெற முடியாதவன் ஆகிவிட்டேன். நான் உங்களை டிஜிட்டல் மூலமாகவும் , எனது ஆதரவாளர்கள் மூலமாகவும் சந்திப்பேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் மற்றொரு முக்கிய வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா நகர் தொகுதி வேட்பாளரும், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளருமான பொன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை வெளியீட்டில் பொன் ராஜ் பங்கேற்றிருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கமல் ஹாசன், மகேந்திரன் உள்ளிட்ட ம.நீ.ம முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்த நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Exit mobile version