Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் சுற்றுலா பயணிகளை கவர தொல்லியல் துறை புதிய முயற்சி 

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் சுற்றுலா பயணிகளை கவர தொல்லியல் துறை புதிய முயற்சி

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் உள்ள தேக்குமர தடுப்புகள் வண்ணம் தீட்டப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாட்டு பணிகளை ஆரம்பிக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏராளமான குடைவரை சிற்பங்கள் உள்ளன. இதில் பகீரத தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் அர்ச்சுனன் தபசு பெரிய பாறை சிற்பம் மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ள குடைவரை சிற்ப பகுதியாகும்.

முனிவர்கள், யோகிகள், பிரம்மாண்ட யானை மற்றும் புலி, குரங்கு, சிங்கம் உள்ளிட்ட விலங்குகள், மயில், காகம், கருடன் உள்ளிட்ட பறவைகள் மற்றும் இயற்கை அம்சங்கள் எனப் பல வகையானவற்றையும் சித்தரிக்கின்ற இச்சிற்பம் மகாபாரத புராணக் கதை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு அழகுர வடிவமைக்கப்பட்ட குடைவரை சிற்ப பகுதியாகும்.

இந்த அர்ச்சுனன் தபசு குடைவரை சிற்பத்தில் ஒற்றைக்காலில் நின்றபடி தவமிருக்கும் ஒரு முனிவர் உருவமும், அவனுக்கு அருகில் சூலாயுதத்தை ஏந்தியபடி, பூதகணங்கள் புடைசூழ நின்று வரமளிக்கும் சிவன் சிலை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் இந்த அர்ச்சுனன் தபசு குடைவரையில் செதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு வரலாற்று புகழ் பெற்ற அர்ச்சுனன் தபசு சிற்ப வளாகத்தை சீரமைத்து அழகுபடுத்தும் பணிகளை மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் தொடங்கி உள்ளது.

இதில் முதல் கட்டமாக தடை செய்யப்பட்ட அர்ச்சுனன் தபசு வளாகத்தின் உள்பகுதியில் உள்ள குழியினுள் சுற்றுலா பயணிகள் இறங்காத வகையில் தேக்கு மரத்தினால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அதற்கு வர்ணங்கள் தீட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 10 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்ட தேக்கு மர தடுப்புகளுக்கு வண்ணங்கள் தீட்டி அழகுபடுத்தம் பணிகள் முதல்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளன.

Exit mobile version