ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கத் தெரியாதவர்களைக் குறிவைத்துக் கொள்ளையடித்த நபர் கைது!
திண்டுக்கல் மாவட்டத்தில் ஓமன்த் என்னும் முதியவர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்திருக்கிறார்,ஆனால் அவருக்கு பணம் எடுக்கத் தெரியாததால் அருகிலிருந்த ஒருவரிடம் உதவி கேட்டிருக்கிறார். ஐந்தாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்த அந்த நபர் போலியான ஏடிஎம் அட்டையை அந்த முதியவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து உண்மையான ஏடிஎம் அட்டையைக் கொண்டு 65 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர் திருடியிருக்கிறார்.
அந்த முதியவர் தன்னிடம் உள்ளது போலி ஏடிஎம் அட்டை என அறிந்த பின்னர் வேடச்சந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.விசாரணையைத் தொடங்கிய தனிப்படை போலீசார் நாகம் பட்டு ஏடிஎம் முன்பு சந்தேகப்படும்படி வகையில் நின்றிருந்த பாலா என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கத் தெரியாத நபர்களைக் குறிவைத்து இந்த கொள்ளையை அரங்கேற்றி வந்ததாகப் பாலா ஒப்புக்கொண்டார்.
அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் 4 போலி ஏடிஎம் அட்டைகளையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இதேபோல் சென்னையில் ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி பல கோடி ரூபாய் கொள்ளையடித்தக் கும்பலையும் போலீசார் கைது செய்தனர். நீலாங்கரை போலீசார் முட்டுக்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியே கார் ஒன்று வந்தது. அதில் சந்தேகப்படும் படியாக நபர்கள் இருந்தனர், அப்பொழுது அந்த வாகனத்தை சோதனை செய்த போது அந்தகாரில் ஏராளமான ஏடிஎம் அட்டைகள், ஸ்கிம்மர் கருவிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்ற போலிசார் அந்த மூன்று பேரைக் கைது செய்தனர். பல ஆண்டுகளாக ஏடிஎம்களில் ஈடுபட்ட வரும் இந்த கும்பல் பிட்காயினில் முதலீடு செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.