எனக்குக் கொரோனா இருக்கிறது அருகில் வராதீர்கள் –ஆந்திர விவசாயி பீதியில் எடுத்த விபரீத முடிவு !
ஆந்திராவில் தனக்குக் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக நினைத்த விவசாயி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 1115 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 47000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றுதான் இந்த வைரஸ் மூலம் நடக்கும் தாக்குதலுக்கு கோவிட்-19 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வைரஸ் தாக்குதல் சீனாவில் மட்டுமே இருந்தாலும், அந்த வைரஸ் சம்மந்தமான பீதி உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பாவி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்துள்ள பகுதி தொட்டம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணையா என்ற விவசாயி. இவர் சிறுநீரக தொற்று காரணமாக அவதிப்பட்டுள்ளார். அதனால் காய்ச்சலும் இருந்துள்ளது. இது சம்மந்தமாக மருத்துவர்கள் மருந்துகள் கொடுத்து பாதுகாப்புக்காக முகமூடி அணிந்து வெளியே செல்ல சொல்லியுள்ளனர்.
ஆனால் காய்ச்சல் குறையாததால் தனக்குக் கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளதாக அவரே கற்பனை செய்து கொண்டுள்ளார். இதனால் குடும்பத்தினர் யாரும் தன்னருகில் வராமல் இருக்க அவர்களை விட்டு விலகி இருந்துள்ளார். மீறி வந்தாலும் கற்களால் அடித்து விரட்டி இருக்கிறார். குடும்பத்தினர் கொரோனா பற்றி எடுத்து சொல்லியும் அதை அவர் கேட்க மறுத்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினருக்கு நோய் பரவி விடக் கூடாது என்பதற்காக வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.