லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி மீண்டும் ‘தளபதி 67’ படத்தில் இணைந்து இருக்கிறது. இந்த படத்திற்கான பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது, படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு ‘விக்ரம்’ படத்திற்கு போன்று வீடியோ மூலமாக வெளியிடப்போகிறது. ‘தளபதி 67’ படத்தில் யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது, அதற்கேற்ப நடிகர்கள் குறித்து தகவல்களும் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கப்போகும் ஒரு முக்கிய நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மன்சூர் அலிகானை மிகவும் பிடிக்கும், இவரது முந்தைய படங்களிலும் அவரது சாயல் கொஞ்சம் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் தனது படத்தில் மன்சூர் அலிகானை நடிக்கவைக்க அவரிடம் அணுகியிருக்கிறார், இந்த ஒப்புதலை மன்சூர் அலிகானும் ஏற்று கொண்டிருக்கிறார். இதனை சமீபத்திய பேட்டியொன்றில் அவர் கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் நடித்திருந்த படங்களில், கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் தான் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும் ஆனால் சமீப காலமாக அவரது படங்களில் என்னால் நடிக்கமுடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ‘தளபதி 67’ படத்தில் விஜய்யுடன் நடிப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறார்.