Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி சொந்த ஊரிலே திருமணத்தைப் பதிவு செய்யலாம்!!

மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்யலாம் என சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009-ன் படி திருமணப்பதிவு என்பது அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி திருமணம் முடிந்த தம்பதி தங்கள் திருமணத்தை 90 முதல் 150 நாட்களுக்குள் பதிவுசெய்ய வேண்டும். இவ்வாறு 150 நாட்களுக்குள் பதிவு செய்யாதவர்கள் பின்னர் எப்போதுமே தங்கள் திருமணத்தை பதிவு செய்திட முடியாது. திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள் அரசு தரும் எந்த ஒரு சலுகையையும் பெற முடியாது.

மேலும், இச்சட்டத்தின்படி திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடியும். திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் தான் திருமணத்தை பதிவு செய்ய முடியும் என்பதால் சிலர் திருமணத்தை பதிவு செய்யாமல் விட்டு விடுகின்றனர்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்திற்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் தான் பதிவு செய்ய முடியும் என்பதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் இனி அனைவரும் திருமணத்தை சிரமமின்றி பதிவு செய்து கொள்ளலாம்.

Exit mobile version