Maruti Suzuki | இந்தியாவில் கார் மார்கெட்டில் கொடி கட்டி பறக்கும் நிறுவனம் என்றாலே அது மாருதி சுசுகி தான். அதிலும், 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான சிறிய ரக கார்களில் மாருதி தான் கிங். இதில் தரும் மைலேஜ், வேறு எந்த கார்களிலும் கிடைக்காது. இந்நிலையில் தான், மாருதி கார் பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டது.
இதற்கிடையே, அதிகரித்து வரும் தயாரிப்பு செலவுகள் மற்றும் ஆப்ரேஷனல் செலவுகள் காரணமாக கார்களின் விலையை உயர்த்தப்போவதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாடல்களை பொறுத்து கார்களின் விலை 4% உயரும் என மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாருதியில் எந்த மாடல் கார், எவ்வளவு விலை உயரும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் அது குறித்த அறிவிப்பையும் மாருதி நிறுவனம் வெளியிடும் எனத் தெரிகிறது. மேலும், செலவுகளைக் குறைக்கவும், விலை உயர்வால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென மாருதி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இந்தாண்டு மாருதி நிறுவனம் 3-வது முறையாக கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்களும், முதல்முறையாக கார் வாங்க விரும்புவோரும் முதலில் தேர்வு செய்வது மாருதி கார் தான். இப்படி இருக்கும் நிலையில், கார்களின் விலையை அந்நிறுவனம் உயர்த்தியிருப்பது கார் பிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாருதி நிறுவனத்தை தொடர்ந்து, டாடா நிறுவனமும் தனது கமர்ஷியல் வாகனங்களின் விலையை ஏப்.1ஆம் தேதி முதல் 2 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.