ஒரு குட்டிக் கத பாடல் இங்கிருந்து உருவப்பட்டதுதான்:இணையத்தில் அனிருத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!
நேற்று அனிருத் இசையில் விஜய் பாடி வெளியான குட்டிக்கத பாடல் வேறொரு தமிழ் பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மாநகரம் மற்றும் கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
இடையில் நடந்த ரெய்டு பிரச்சனைகளால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குட்டி கத என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடல் மாலை 5 மணிக்கு வெளியானது.
வழக்கமாக விஜய் பாடும் பாடல்கள் வேகமான மெட்டு கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த பாடல் மிக மெதுவாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பாடல் தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளால் நிரம்பியுள்ளது. அதனால் சிலர் கேட்பதற்கு கொலவெறி பாடல் போல இருப்பதாக விமர்சனம் செய்தனர். ஆனாலும் பாடல் பரவலான கவனத்தை பெற்றுள்ள நிலையில் இப்போது வேறொரு பாடலில் இருந்து இந்த பாட்டு காப்பி அடிக்கப்பட்டதாக புது விமர்சனம் எழுந்துள்ளது.
ராமநாராயணன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ராஜகாளியம்மன். இந்த படத்தில் இடம்பெறும் பாடலான சந்தன மாளிகையில் தூளி கட்டி போட்டேன் என்ற பாடலின் ராகத்தில் இருந்துதான் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாடலை வடிவேலு ஸ்வர்ணலதாவுடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு பாடலின் மெட்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும் குட்டி கத பாடலை காப்பி என சொல்ல முடியாது எனத் தரப்பும் வாதிட்டு வருகிறது.