கேட் கீப்பரை தாக்கி அரசுக்கு சொந்தமான மெகா போனை உடைத்த வழக்கில் இரண்டு இளைஞர்களுக்கு 7 வருடம் சிறை!!
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே காவல் சரகத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் அருகே கண்ணாங்குளம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் கேட் கீப்பர் முத்துசாமி என்பவர் பணியில் இருந்தார்.
அப்போது ரயில்வே கேட் போடப்பட்டிருந்த நிலையில் அங்கு வந்த கொள்ளிடம் கேசவன் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (23), தோப்புத் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (28) ஆகிய இருவரும் கேட்டை திறக்க சொல்லி கேட் கீப்பர் முத்துசாமியிடம் தகராறில் ஈடுபட்டு முத்துசாமியை தாக்கி அவர் வைத்திருந்த அரசுக்கு சொந்தமான மெகாபோனையும், முத்துசாமியின் செல்போனையும் பிடுங்கி உடைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில் மயிலாடுதுறை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மாவட்ட குற்றவியல் அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜர் படுத்திய 10 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்ட பிரகாஷ், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவருக்கும் இன்று மாவட்ட நீதிபதி இளங்கோ 7 ஆண்டு சிறை காவல் தண்டனையும், இருவருக்கும் தலா ரூபாய் ஐயாயிரம் அபராதம் விதித்து பிரகாஷ், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க ரயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்து குற்றச் செயலில் ஈடுபட்டதன் விளைவாக இரண்டு இளைஞர்களும் ஏழு வருடம் சிறைவாசம் சென்றது குறிப்பிடத்தக்கது.