முன்விரோதத்தால் திருச்செந்தூரில் மெக்கானிக் சரமாரியாக வெட்டி படுகொலை
திருச்செந்தூரில் மெக்கானிக் மற்றும் அவருடைய சித்தப்பாவிற்கு அரிவாள் வெட்டு.இதில் மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் மற்றும் அவருடைய சித்தப்பா படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கொண்ட அந்த கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியிலுள்ள நா.முத்தையாபுரம் கக்கன் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்பவரின் மகன் ராஜதுரை. மெக்கானிக்கான இவர் திருச்செந்தூர் தோப்பூரில் இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையை நடத்தி வந்துள்ளார். மேலும் திருமணமான இவருக்கு தெய்வக்கனி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அவருடைய சித்தப்பா கணேசன் திருச்செந்தூர் தோப்பூரைச் சேர்ந்தவர். 57 வயதாகும் அவர் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ராஜதுரை தனது மெக்கானிக் கடையை திறக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ராஜதுரையும் அவரது சித்தப்பாவும் நண்டு பிடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் தோப்பூர் கடற்கரை நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல் திடீரென்று மோட்டார் சைக்கிளில் சென்ற அவர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜதுரை, கணேசன் ஆகிய 2 பேரும் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோட முயன்றனர். விடாமல் துரத்திய அந்த கும்பல் அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்த சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ராஜதுரை, கணேசன் ஆகிய 2 பேரும் அலறி துடித்தவாறு தோப்பூர் நோக்கி ஓடி வந்தனர்.
இந்நிலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய ராஜதுரை மற்றும் கணேசன் ஆகிய 2 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே சிகிச்சை பலனின்றி வெட்டுபட்ட ராஜதுரை நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த கணேசனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதில் ஏற்கனவே திருச்செந்தூர் தோப்பூரைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், பக்கத்து தெருவான வண்ணாந்திரைவிளையைச் சேர்ந்த மற்றொரு பிரிவினருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 25 ஆம் தேதி வண்ணாந்திரைவிளையைச் சேர்ந்த பாலமுருகன், வதன்ராஜ், ரஞ்சித் ஆகிய 3 பேரையும் தோப்பூரைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த பாலமுருகன், வதன்ராஜ், மற்றும் ரஞ்சித் உள்ளிட்டவர்கள் பழிக்குப் பழியாக எதிர்தரப்பினரை தாக்க திட்டமிட்டு வந்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவில் அவர்கள் ராஜதுரை, கணேசன் ஆகிய 2 பேர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருச்செந்தூர் கோவில் காவல்துறையினர் தலைமறைவான பாலமுருகன், வதன்ராஜ், ரஞ்சித் மற்றும் அவர்களுடைய நண்பர்களான ராஜசேகர், ஆனந்தன், அஜய் பாரதி, குரு, ராகுல், மகேந்திரன் ஆகிய 9 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மீன் பிடிக்க மோட்டார் சைக்கிளில் சித்தப்பாவுடன் சென்ற மெக்கானிக்கை முன்விரோதம் காரணமாக 9 பேர் கொண்ட கும்பல் இவ்வாறு சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.