கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் இருக்கின்ற ராஜா முத்தையா கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கல்லூரி கட்டணம் வசூல் செய்வதாக மாணவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். அந்த கல்லூரி மாணவர்களின் போராட்டமானது கடந்த 45 தினங்களாக தொடர்ந்து வரும் நிலையிலே, அந்த கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் அனைவரையும் கல்லூரியை விட்டு வெளியே செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
கல்லூரி நிர்வாகம் வெளியே செல்லுமாறு தெரிவித்த பின்னரும் மாணவர்கள் வெளியே செல்ல மறுத்த காரணத்தால், நேற்றையதினம் அந்த கல்லூரி மாணவர்களுக்கு விடுதியில் உணவு கொடுக்கப்படவில்லை. ஆகவே அவர்களுக்கான உணவை அவர்களே தயார் செய்து சாப்பிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், விடுதியை விட்டு தங்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தி குடிநீர் உணவு போன்ற அடிப்படை உரிமைகளையும் பறித்து விட்டார்கள் கல்லூரி நிர்வாகத்தினர் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அந்த கல்லூரி மாணவர்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது இதில் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு ஒரு நல்ல தீர்வை காணவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முதல் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. மாணவர்களின் போராட்டத்திற்கு செவிசாய்க்குமா அரசு என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அந்த கல்லூரி மாணவர்கள்.