முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நாளை மறுதினம் மேகதாது அணை பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து சட்டமன்ற கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கவிருக்கிறது. ‘பொன்னி நதி’ என அழைக்கப்படும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்கிற இடத்தில் அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது.
இதனை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருகிறது நமது தமிழக அரசு. பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அணை பிரச்சனை குறித்து விளக்கினார். பெங்களூரு குடிநீர் தேவைக்காக இந்த அணை கட்டப்படுகிறது என்று கர்நாடக அரசு விளக்கமளித்துள்ளது ஏற்க கூடியது அல்ல. இந்த திட்டத்தினால் தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
எனவே, தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கடந்த 6ஆம் தேதி ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் டெல்லியில் சந்தித்து இந்த பிரச்சனையில் ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிய போது, தமிழ்நாடு விவசாயிகளின் நலன், அணை கட்டுவதால் பாதிக்கப்படும் என்றும், இந்த அணையை அமைத்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் உறுதிபட தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வரான எடியூரப்பாவுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
விவசாயிகளின் நலன் காப்பதற்கு மேகதாது அணை பிரச்சனை குறித்து ஆலோசிக்க அனைத்து சட்டமன்ற கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் வருகிற 12-ஆம் தேதி காலை பத்து முப்பதுக்கு தலைமை செயலகத்தில் நடைபெற இருக்கிறது. இதன்மூலம் மேகதாது அணை பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.