தொடர் கனமழை பெய்து வருவதால் வேகமாக நிரம்பி வரும் மேட்டூர் அணை!

0
176
mettur-dam-overflows-due-to-continuous-heavy-rains

தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை 2 நாட்களில் நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வீடு மற்றும் சாலையோரங்களில் குளம் குட்டையாக காணப்படுகிறது. தலைநகர் சென்னையில் தொடர் கனமழையால் திரும்பும் இடமெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.

மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. ஏரிகள், ஆறுகளில் உபரிநீர் திறந்துவிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது. நீர்வரத்து திடீரென கிடுகிடுவென அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடி நீர்மட்டம் விரைவில் எட்டும் வாய்ப்பு உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் நீர் மட்டத்தின் அளவு 117 அடியாக உள்ளது.

இதனிடையே காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ இதர பணிகளுக்கோ கரைகளுக்கு வரக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.