கர்நாடகாவில் கனமழை செய்து வருவதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் விநாடிக்கு 1.50 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி விநாடிக்கு 1.45 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.நேற்று மாலையில் 1.50 லட்சம் கன அடியாக நீர் அதிகரித்து வருகின்றது.
கர்நாடக கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து உள்ளதாகவும்,கிருஷ்ண சாகர் அணையின்முழு கொள்ளளவை 128 அடியாகவும் தற்போது நீரின் அளவு 119 அடியில் நிரம்பியுள்ளதால் வரும் தண்ணீர் அப்படியே காவிரி டெல்டாவுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 90 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு 8 மணியளவில் 1.30 லட்சம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று முன்தினம் 75.05 அடியாக இருந்த மேட்டூர் நீர்மட்டம், நேற்று இரவு 81.10 அடியானது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது நீர் இருப்பு 43.06 டி.எம்.சி. நீர்வரத்து அதிகரிப்பால், விரைவில் மேட்டூர் அணை 100 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலைநிலவரப்படி கர்நாடக அணையிலிருந்து காவிரி நீர் திறப்பு குறைந்து வருவதாக பொதுப்பணித்துறை கூறியுள்ளது. காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு நேற்று பிற்பகலில் 85,600 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.