மெக்சிகோ: வடஅமெரிக்காவின் தெற்கு பகுதியில் மெக்சிகோ நாடு அமைந்துள்ளது. அந்நாட்டில் நேற்று காலை 10:30 மணியளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் தெருவிற்கு வந்தனர். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் எல்சல்வடார், ஹோண்டுராஸ், கவுதமாலா மற்றும் மெக்சிகோ சிட்டி போன்ற நகரங்களில் அதிகமாக உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலியின் எண்ணிக்கை உயரலாம் என்றும் மெக்சிகோவின் தேசிய சிவில் பாதுகாப்பு சேவை அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் கடற்கரை பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் பாதுகாப்பான இடங்களைத் தேடி குடியேறுகின்றனர். இதையடுத்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. அகாபுல்காவில் 2.2 அடி உயர அலையும், சலீன க்ரூவில் 2.3 அடி உயர அலையும் எழும்பலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் பாதிப்புகள் எழவில்லை. உலகில் அதிகம் நிலநடுக்கத்தால் பாதித்த நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று. இது டெக்டானிக் தட்டுகளின் மீது அமர்ந்துள்ளதால் அவை நகரும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. மெக்சிகோவில் கடந்த 2017 ஆம் ஆண்டு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு 100 க்கும் மேற்பட்டோர் இறந்தது குறிப்பிடத்தக்கது.