தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள்! ஆவின் நிறுவனம்  பாதிக்கும் சூழல்!

0
263
Milk producers engaged in continuous struggle! The environment that affects the company!

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள்! ஆவின் நிறுவனம்  பாதிக்கும் சூழல்!

கடந்த வாரம் பால் கொள்முதல் விலையை ரூ 31 ல் இருந்து 40 ரூபாய்க்கு உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்புவதை நிறுத்தி தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றார்கள்.

மேலும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் இறங்கி உள்ளனர். கடந்த வாரம் உசிலம்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி மற்றும் சர்க்கரைப்பட்டி பகுதிகளை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் சாலையில் பாலை கொட்டி  போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம், மதிப்பானூர் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களும் சாலையில் பாலை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பா நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் பால் விலையை  உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் தொட்டப்ப நாயக்கனூர் விலக்கில் தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் நடு ரோட்டில் பாலை ஊற்றி தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றார்கள்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் வெண்மணி சந்திரன், செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் சாமியா ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.மதுரை மாவட்டத்திலுள்ள உற்பத்தியாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால் ஆவின் பால் விநியோகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் தங்களின் போராட்டம் தொடரும் எனவும் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.