அமைச்சரின் உதவியாளர் கடத்தல்! தீவிர விசாரணையில் காவல்துறை

0
119
Minister Assistant Kidnapped in Tirupur-News4 Tamil Online Tamil News

தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரின் அரசியல் உதவியாளர் கடத்தப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சரும், அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணனின் அரசியல் உதவியாளராக கர்ணன் என்ற கனகராஜ் பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தின் போது உடுமலை சட்டமன்ற மன்ற அலுவலகத்தில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கடுமையாக தாக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காரில் போட்டு அவரை கடத்திச் சென்றுள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து தற்போது இந்த சிசிடிவி பதிவுகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு ஆளும் கட்சியின் அமைச்சருடைய நேர்முக உதவியாளர் கடத்தப்பட்டதை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட கண்காணிப்பாளர் ரா, அருள்ரசு உத்தரவின் பேரில், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் கே.ஜி சிவகுமார் மேற்பார்வையில், பொள்ளாச்சி உடுமலை சாலை சோதனை சாவடிகள், பொள்ளாச்சி திருப்பூர் சோதனைச் சாவடிகள் மற்றும் கோவை முக்கிய பிரதான சாலைகளில் காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர் தீவிர வாகன சோதனையும், வாகன ரோந்து பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து பல மணி நேர சோதனைகளுக்கு பின்னர் உடுமலை தளி பகுதியில் கடத்தப்பட்ட கர்ணனை காவல் துறையினர் மீட்டுள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கடத்தல் நடந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட அந்த  4 பேரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.