சர்வாதிகாரத்துடன் நடக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர்-அமைச்சர் சி.வி.சண்முகம்
சர்வாதிகாரத்துடன் நடக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர் என ஆளும் அதிமுகவை சார்ந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றதொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளில், இரு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது, பொய் பேசிக் கொண்டிருக்கும், ஆணவம், அகம்பாவம், சர்வாதிகாரத்துடன் நடக்கும் ஸ்டாலினுக்கு இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர். மக்களை முட்டாள் என நினைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் தெளிவான தீர்ப்பைத் தந்திருக்கின்றனர் என்றும் கூறினார்.
கடந்த வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் எங்களின் வெற்றி வாய்ப்பு பறி போனது. தமிழகத்தில் மக்களைப் பாதிக்கும் விஷயங்கள் எதுவும் இல்லை. மக்களை உணர்ச்சிகரமாகத் தூண்டுகின்ற எந்த நிகழ்ச்சியும் இல்லை. எந்த வித குழப்பமும் இல்லாமல், 2021-ல் தமிழகத்தை யார் ஆள வேண்டும் என மக்கள் தெளிவாக கூறியிருக்கின்றனர். இந்த தமிழ்நாட்டை ஆளக்கூடிய சக்தி அதிமுகவுக்குத் தான் உண்டு என மக்கள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர். ஜெயலலிதா வழியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் தெளிவாக தீர்ப்பளித்திருக்கின்றனர்.
இந்த வெற்றி அதிமுக தொண்டர்களின் வெற்றி, கூட்டணிக் கட்சி தொண்டர்களின் வெற்றி. இந்த வெற்றிக்காக உழைத்த அவர்களுக்கு என் பாதம் தொட்டு நன்றியைத் தெரிவிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த வெற்றியைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவுக்கு வர வாய்ப்பிருக்கிறதா? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர்,அரசியலில் எல்லாம் சாத்தியம். தலைமை தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும். மக்களின் இயலாமையைப் பயன்படுத்தி ஆசையை தூண்டிவிட்டு ஏமாற்றி பெற்ற வாக்குகளால் தான் இன்று, மூன்றே மாத காலங்களில் திமுகவுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.