கொரோனா தொற்றால் பாதிப்படைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களின் உடல்நிலை தற்சமயம் வெகுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு எடுத்துவிட்டு அமைச்சர் காமராஜ் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது அவருக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 5ஆம் தேதி ராமாபுரத்தில் இருக்கின்ற மியாட் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இந்த மருத்துவமனையில் முதலில் அமைச்சர் காமராஜுக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதன் பிறகு ஒரு சில நாட்களுக்கு பின் எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்று சொல்லப்பட்டது. இருந்தாலும் அவர் தொடர்ச்சியான சிகிச்சையில் அந்த மருத்துவமனையிலேயே இருந்து வந்தார் .அதன் பிறகு பொங்கல் தினத்திற்கு முன்னாலேயே அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.
ஆனால் மறுபடியும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அதன் காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், மறுபடியும் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .மறுபடியும் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக, ஜனவரி மாதம் 19ஆம் தேதி காலை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் அமைச்சர் காமராஜ். இதனை தொடர்ந்து திடீரென்று அவருடைய உடல்நிலை ஆனது மோசமான நிலையை அடைந்ததால் அமைச்சர் காமராஜ் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அரும்பாக்கம் பகுதியில் இருக்கக்கூடிய எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் அதோடு செயற்கை சுவாசம் மூலமாக அமைச்சருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்ததாகவும் உடல்நிலை மோசமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற சூழ்நிலையில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல் நிலையானது தற்சமயம் சீராக இருப்பதாக எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு அதிகரித்து இருப்பதாகவும் உடல் சமநிலை எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விரைவாக அமைச்சர் காமராஜ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.