Minister Ma. Subramanian: தமிழகத்தில் விரைவில் ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் நிறுவப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார்.
சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று, தேசிய மருந்தாளுநர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும், மாநாட்டில் வெளிநாட்டை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பானவைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது, பேசிய அமைச்சர் இந்தியாவில் தமிழகத்தில் தான் மருத்துவ படிப்புகளுக்கான கல்லூரிகள் நவீன வசதிகள் கொண்டதாக இருக்கிறது என்றார். மேலும், இந்த மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட மருந்தியல் ஆய்வு அறிக்கைகள் மருத்துவத் துறைக்கு சமர்பிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் இருந்து 200 நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா 40 சதவீத ஜெனரிக் மருந்துகள் இந்தியாவில் இருந்து தான் பெறுகிறது என்றார். மேலும், பேசிய அவர் தமிழகத்தில் காலியாக இருக்கும் 2,553மருத்துவ பணியிடங்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி ஆன்லைன் தேர்வு நடைபெறும் என அறிவித்தார்.
தமிழக மருத்துவ பயன்பாட்டிற்காக 220 ஜெனரிக் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனக் கூறினார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்பட்ட மக்கள் மருந்தகங்கள் 1000 என்ற எண்ணிக்கையில் தொடங்கப்படும் என அறிவித்தார். இந்த மக்கள் மருந்தகம் என்பது தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் விலைகளை விட சற்று குறைவாக இருக்கும்.
இந்த திட்டத்தால் தமிழகத்தில் பல லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள் எனக் கூறினார். இது போன்ற குறைந்த விலையில் மருந்துகள் வாங்க மத்திய அரசால் கொண்டு வந்த திட்டம் தற்போது தமிழகத்தில் செயல்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.