போராட எந்த பிரச்சினையும் இல்லை கோயிலை திறக்க போராட்டம்; பாஜகவை விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு.!!

0
144

போராட எந்த பிரச்சினையும் இல்லாததால் அரசியல் கட்சிகள் கோயிலை திறக்க போராட்டம் நடத்தி வருவதாக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பாஜகவை நேரடியாக விமர்சித்துள்ளார்.

வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் அவர்கள், கடலூர் மாவட்டம் மருதூரில் 5.10.1823 அன்று பிறந்தார். அவரின் 199வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள வள்ளலாரின் இல்லத்துக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று வள்ளலாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், ‘சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை புனரமைக்க அரசு உதவி செய்யும் வள்ளலாரின் பணிகளை விரிவுபடுத்தும் விதமாக வள்ளலார் சர்வதேச மையம் விரைவில் கட்டப்படும்’ என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அதன்பிறகு, கோயில்களை திறக்க கோரி பாஜக நடத்தி வரும் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘தமிழக அரசியல் களத்தில் ஆட்சியை எதிர்த்து மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றித் தர போராடுவதற்கு எதுவும் கையில் இல்லை அதனால், இன்றைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்’ என்று கூறியுள்ளார்.

மேலும், கோயில்களை நாள் முழுவதும் மூடவில்லை வாரத்தில் மூன்று நாட்கள், அதிகமாக கூட்டம் கூடும் நாட்கள், விடுமுறை நாட்கள் பக்தர்களின் வழிபாட்டுக்கு தான் தடைவிதித்து இருக்கிறோமே தவிர இறைவனுக்கு நடத்த வேண்டிய அனைத்து பூஜைகளும் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆகவே, இந்த போராட்டம் என்பது என்னைப் பொறுத்தவரையில் தேவையற்றது என்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.