அதிமுக மாஜி அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்திய பிறகும் கைது செய்யாமல் தாமதிப்பது ஏன்? ஸ்டாலினின் மாஸ்டர் பிளான் 

0
192
MK Stalin - Latest Political News in Tamil Today

அதிமுக மாஜி அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்திய பிறகும் கைது செய்யாமல் தாமதிப்பது ஏன்? ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுகவின் மாஜி அமைச்சர்கள் பலரின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ரயில் முடிந்த பிறகு மாஜி அமைச்சர்கள் ஒவ்வொருவர் மீதும் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் புகார்கள் இருக்கும் நிலையில், பலமுறை ரெய்டுகள் நடைபெற்ற போதிலும் யாரும் இதுவரை கைது செய்யப்படாதது திமுக தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

திமுக அரசு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விவகாரத்தில் மிகவும் பொறுமையாகச் செயல்படுவதன் பின்னணியில் ஸ்டாலினின் முக்கியமான  சீக்ரெட் திட்டம் இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.

பாஜகவின் ஆதரவு அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு கிடைக்கக்கூடும் என்பதாலேயே, இந்த விஷயத்தில் ஸ்டாலின் பொறுமையைக் கடைபிடிப்பதாகவும்,  மேலும்  இது குறித்த வலுவான ஆதாரங்களைத் திரட்டச் சொல்லி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த  வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும்போது, எந்தவித பலவீனமும் இருக்கக்கூடாது என்றும், நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கவனமாக இருக்கிறாராம்.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது கிராமப்புறங்களில் தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியதில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக எஸ்.பி.வேலுமணி மீது  குற்றம் சாட்டப்பட்டது.

அதேபோல தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு  செய்தனர். கடந்த வாரம் ஒரே நேரத்தில் அதிரடி ரெய்டில் இறங்கினர்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் வீடுகளிலும், அவர்கள் தொடர்புடைய இடங்களும் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக இந்த ரெய்டு நடந்தது. எஸ்.பி.வேலுமணி சொந்தமான 31 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ஏற்கெனவே இரண்டு முறையும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ஒருமுறையும் ரெய்டு நடத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இந்தச் சோதனை நடத்தப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல முன்னாள் அமைச்சர்கள் கேசி வீரமணி, தங்கமணி, கேபி அன்பழகன், எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் மீதும் இதுவரை ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள்  நடைபெற்றுள்ளன. ஆனால் இது குறித்து இதுவரை குற்றப் பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இதுகுறித்து திமுக அரசு மீது அக்கட்சியினர் பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.

தேர்தலுக்கு முன்பு பிரசாரக் கூட்டங்களில் பேசும்போது, ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் சிறைக்குச் செல்வார்கள் என ஸ்டாலின் கூறிய நிலையில், எந்த அமைச்சரும் இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படாதது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது. அதிமுகவினரும் கூட, திமுக அரசால் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய முடியவில்லை, இது காழ்ப்புணர்ச்சியால் நடந்த ரெய்டு என விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், முதல்வர் ஸ்டாலினின் கணக்கு வேறொன்றாக இருக்கிறது என்கிறார்கள் அரசியல்  ஆர்வலர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1996  இல் கைது செய்யப்பட்ட போதும் கருணாநிதி அவசரம் காட்டவில்லை. வலுவான ஆதாரங்களைச் சேகரித்து போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த வழக்குகளில் ஜெயலலிதா, முன்ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றமே ஏன் இன்னும் ஜெயலலிதாவை கைது செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பிய பிறகுதான், உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.

அதேபோன்ற வியூகத்தையே தற்போது ஸ்டாலினும் கையில் எடுத்திருக்கிறாராம். இப்போது கைது என அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டால், முன்னாள் அமைச்சர்கள் விரைவில் வெளியே வந்துவிட வாய்ப்பு அதிகம். டெல்லி பாஜகவும் அவர்களுக்கு ஆதரவு தரக்கூடும்.

ஒருவேளை உயர் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றாலும், உச்ச நீதிமன்றத்தில் அதற்கு தடை விதிக்கப்படலாம். அதனால் வழக்கு இழுவை நிலைக்குப் போகலாம். எனவே தான், முன்னாள் அமைச்சர்கள் மீது  தற்போது வரை கைது நடவடிக்கையில் திமுக அரசு இறங்கவில்லை என்கிறார்கள்.

அதிமுகவுக்கு நெருக்கடி அளிக்கும் முடிவுக்கு பாஜக வரும் போது நீதிமன்றத்தில் அதிமுகவினர் தண்டனை பெற்றால், அப்போது பாஜகவின் உதவி அவர்களுக்கு கிடைக்காமல் போகும். அந்த மாதிரி சூழல் ஏற்பட வேண்டும் என்று  தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைதி காத்து வருகிறாராம்.

இதனால் தான் ஊழல் நடவடிக்கை விவகாரத்தில் திமுக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், இன்னும் தாமதிப்பதாக கூறப்படுகிறது.

அந்த அடிப்படையில் வலுவான ஆதாரமின்றி எதிலும் இறங்கக்கூடாது. நாம் சமர்ப்பிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், நீதிமன்றமே சிறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும், அதற்கேற்ப வலுவான ஆதாரங்களை தயார் செய்யுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்திருக்கிறாராம்.