திமுக சார்பாக குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி-கட்சிகளுக்கு ஸ்டாலின் அழைப்பு
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இது குறித்து அடுத்தகட்ட செயல்பாட்டிற்காக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சந்தித்து பேசும் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் இந்த சட்டத்தை எதிர்த்தும் இதற்கு காரணமாக இருந்த பாஜக மற்றும் அதிமுக கட்சிகளை எதிர்த்தும் அனைத்து கட்சிகள் மற்றும் சங்கங்கள் இணைந்து பேரணி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து மற்ற கட்சிகள் மற்றும் சங்கங்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது.
இந்திய அரசும், மக்களும் இதுவரை காப்பாற்றி வந்த சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை, ஒற்றுமை ஆகிய தத்துவங்களுக்கு முரணான வகையில் மத்திய பா.ஜ.க. அரசு இந்த குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அனைத்து மதத்தவரும் வரலாம் என்றால் ஏன் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அண்டை நாட்டவர் வரலாம் என்றால் அதில் ஈழத்தமிழர் புறக்கணிக்கப்பட்டது எதனால்? என்ற கேள்வியை எழுப்பி வருகிறோம்.
மக்களை மதரீதியாக, இனப்பாகுபாட்டுடன் பார்க்கும் சட்டத்தை நிறைவேற்றி இருக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 23-ந்தேதி சென்னையில் மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடர வேண்டும். கட்சி எல்லைகளை கடந்து, மதம், ஜாதி, மாநில பாகுபாடுகள் கடந்து இப்போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே இச்சட்டத்தை திரும்பப் பெற வைக்க முடியும். ஜனநாயக குரலை எழுப்புமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.