அது எங்களுக்கு வேண்டவே வேண்டாம்! பிரதமருக்கு விடாப்பிடியாக கோரிக்கை வைத்த முதலமைச்சர்!

0
111

தமிழ்நாட்டில் கட்டப்பட்டு இருக்கின்ற 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழில் உரையாற்றினார் என சொல்லப்படுகிறது.

அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பிறகு பிரதமர் பங்கேற்கும் முதல் அரசு விழா இது ஆகவே அவருக்கு தமிழக அரசின் சார்பாக வாழ்த்துக்களையும், நன்றியையும், தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் என்பதே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவு என்று தெரிவித்திருக்கிறார். 2006 ஆம் வருடம் சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில் அதை அவர் குறிப்பிட்டு இருந்தார். அவருடைய கனவு தான் தற்சமயம் நிறைவேறி உள்ளது என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தற்சமயம் நாட்டிலேயே அரசு மருத்துவக் கல்லூரியில் மிக அதிக மருத்துவ இடங்களையும், மருத்துவ மேற்படிப்பு இடங்களையும், கொண்டு மருத்துவத்துறையில் நாட்டிற்கு தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. இதற்கான அனுமதியும், ஒத்துழைப்பையும், நிதிஒதுக்கீடு உள்ளிட்டவற்றை வழங்கிவரும் மத்திய அரசுக்கும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும், மனமார்ந்த நன்றியினை கூறியிருக்கிறார்.

புதிதாக ஏற்படுத்தப்பட்டு இருக்கின்ற மாவட்டங்களிலும் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு மாநில அரசுக்கு தங்களுடைய அரசு தொடர்ந்து உதவி புரியவேண்டும். மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்களுக்கு பயன் தரும் விதத்தில் வரும் முன் காப்போம் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 உள்ளிட்ட பல மருத்துவ திட்டங்களை செயல்படுத்துவதிலும் திமுக அரசு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது என கூறியிருக்கிறார்.

புதுமையான திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படும் தமிழக அரசின் மருத்துவத் துறைக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மேலும் உயர்த்தப்பட வேண்டும். பல மாநிலங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவி வருகின்ற இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கிராமப்புறங்களிலும், அரசுத் துறையிலும், மிக சிறப்பாக சேவை புரிவதற்கு தமிழக அரசின் மாணவர் சேர்க்கை கொள்கையை அடிப்படை என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு எங்களுடைய கொள்கை இந்த வாய்ப்புகளை தமிழகத்தில் இருக்கின்ற கிராமப்புற ஏழை, எளிய, மாணவர்களுக்கு கிடைக்க செய்ததாக தமிழ்நாட்டில் மருத்துவத் துறையின் வெற்றியும் இந்த கொள்கையின் விளைவு தான் என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த அடிப்படைக் கொள்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். ஆகவே மனித ஆற்றலின் அடித்தளமாக அமைந்திருக்கின்ற மாணவர் சேர்க்கை முறை குறித்து தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார்.

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும்போது கருணாநிதி இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். தமிழர்களின் நூற்றாண்டு கனவான செம்மொழி தகுதியை 2004ஆம் வருடம் பெற்றுக் கொடுத்தவர் அவர்தான் அவருடைய முயற்சியால் உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் இந்த செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் என குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர்.

அந்த நிறுவனத்திற்கு 24 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைத்து கொடுத்த மத்திய அரசுக்கும், பிரதமருக்கும், நன்றி. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் போது தமிழுக்கு இது போன்ற சிறப்பு செய்யப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, பிரதமருக்கு என்னுடைய பொங்கல் வாழ்த்துக்கள் என்று அவர் உரையாற்றி இருக்கிறார்.