Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சட்டத்தை மதிபோருக்கு இன்முகமும் சட்டத்தை மீறுவோருக்கு இரும்புக்கரமும்! முதலமைச்சர் காவல்துறைக்கு அதிரடி அறிவுரை!

வண்டலூர் ஊனமாஞ்சேரியில் இருக்கின்ற தமிழக காவல் உயர் பயிற்சி நிறுவனத்தில் 941 உதவி ஆய்வாளர்களுக்கான ஒரு வருடத்திய பயிற்சி நேற்று ஆரம்பமானது. இதில் காணொளியின் மூலமாக பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் உதவி ஆய்வாளர் களுக்கான பயிற்சியை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு, காவலர் பயிற்சி இயக்கத்தின் இயக்குனர் அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் போது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால் இன்னொரு கை காவல்துறை இந்த இரண்டு முறையாக செயல்பட்டால் அந்த அரசாங்கம் மிகச்சிறந்த அரசாங்கமாக செயல்படும் விதத்தில் காவல்துறையின் செயல்பாடு மிக மிக முக்கியமானதாக இருக்கிறது. காவல்துறையில் எத்தனையோ உயர் பதவிகளில் இருந்தாலும் மக்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள கூடிய இடத்தில் இருப்பவர்கள் உதவி ஆய்வாளர்கள் ஆகிய நீங்கள் தான் என தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

காவல்துறை என்றாலே குற்றங்களை தடுக்கும் துறையாக இருக்க வேண்டும், தண்டனை வாங்கித் தரும் துறையாக மட்டும் எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்0 காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத விதத்தில் சூழ்நிலையை ஏற்படுத்தி தரும் ஒரு துறையாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதைவிட குற்றமே நடைபெறாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தும் ஒரு துறையாக காவல்துறை அவதாரம் எடுக்க வேண்டும். மக்களுக்கு அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை என்று தெரிவித்திருக்கிறார்.

நாட்டிலேயே முதல் முறையாக காவல் துறையில் மகளிர் பங்கு கொள்ள வைத்தவர் கலைஞர் தான் என்பதை உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். காவல்துறையில் உங்களைப் போன்ற பெண் வீராங்கனைகள் அதிகமாக பங்கு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாக்கியத்திற்கு முன்னுதாரணமாக நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டும். அநியாயத்தை தடுப்பதற்கு எப்போதும் தயங்காதீர்கள், நியாயத்திற்காக எப்போதும் முன் நில்லுங்கள் உங்களுடைய எல்லைக்குட்பட்ட பகுதியை குற்றம் நடக்காத ஒரு பகுதியாக மாற்றிக் காட்டுங்கள் உண்மை குற்றவாளிகள் எல்லோரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான வேலையை செய்யுங்கள் என கூறியிருக்கிறார்.

சூழ்நிலையின் காரணமாக, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை திருத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள் சட்டத்தை மதித்து இன்முகத்துடன் மற்றும் சட்டத்தை மீறுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கி பழகுங்கள் என கலைஞர் தெரிவிப்பார். இதுதான் உங்களுடைய இலக்காக இருக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

Exit mobile version