கட்சிக்கு வந்தவுடனேயே முக்கிய பதவியை பிடிக்க போகும் பிரமுகர்! அதிர்ச்சியில் சீனியர்கள்!

0
115

மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத்தலைவர் பதவி வகித்து வந்தவர் மகேந்திரன் இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோயமுத்தூரில் போட்டியிட்டு 1.44 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். இதனையடுத்து சமீபத்தில் நடைபெற்று முடிவுற்ற சட்டசபை தேர்தலில் கோவை சிங்காநல்லூர் சட்டசபை தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக இவர் களம் கண்டார். அதேபோல கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் களம் கண்டார்.

இது தொடர்பாக கிடைத்த புதிய தகவல் என்னவென்றால் கோயமுத்தூரில் மகேந்திரன் அவர்களுக்கு கிடைத்த வாக்கை வைத்துதான் மக்கள் நீதி மையம் கட்சிக்கு கோயம்புத்தூர் பகுதியில் செல்வாக்கு இருக்கிறது என்று நினைத்து சென்னையை தவிர்த்து விட்டு கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால் மகேந்திரன் தோல்வி பெற்றிருந்தாலும் 36 ஆயிரத்து 855 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

கமல்ஹாசன் முதலில் சென்னை மயிலாப்பூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தான் முடிவு செய்திருந்தார். ஏனென்றால் அங்கே அவருக்கு செல்வாக்கு அதிகம் இருந்தது. அவர் பிரச்சாரத்திற்கு சென்ற சமயத்தில் கூட அதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் அவர் திடீரென்று அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான முடிவை மாற்றிக்கொண்டு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் முடிவுக்குப் பின்னர் கமல்ஹாசனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, மக்கள் நீதி மையம் கட்சியின் துணை தலைவர் பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மகேந்திரன் விலகிவிட்டார். இந்த சூழலில் மகேந்திரன் மிக விரைவில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத்தலைவர் என்ற அளவிற்கு மகேந்திரன் வளர்ந்திருந்தாலும் அவருக்கு கோயமுத்தூரில் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே திமுகவில் அவர் இணைந்தவுடன் அவருக்கு முக்கிய பதவி வழங்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.