தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ், நபார்டு ஊரக உட் கட்டமைப்பு வளர்ச்சி நிதி மூலம் 2024-25 ஆண்டில் 37 மாவட்டங்களில் 1,452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகளை அமைக்க ரூபாய் 804.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில், ஊரக மற்றும் தொலைதூர பகுதிகளில் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதும், ஊரக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதும் நோக்கமாகும்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஊரக மக்களுக்கு நேரடி போக்குவரத்து வசதி வழங்குவதில் சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரகச் சாலைகள் போக்குவரத்து நெடுவரிசையில் கடைசியாக இணைப்பாக கருதப்பட்டாலும், அவை ஊரகப் பகுதிகளில் மக்களுக்கு போக்குவரத்து வசதி அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் 1,37,000 கிலோ மீட்டர் நீளமான பரந்த சாலைத் தொகுப்பு உள்ளது, இதன் மூலம் தொலைதூர பகுதிகளுக்கும் சாலை இணைப்பை மேம்படுத்த முடியும் என அரசு தெரிவித்துள்ளது.
மாவட்ட அளவிலான திட்டங்கள் மதுரை, தருமபுரி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. உதாரணமாக, கரூர் மாவட்டத்தில் ₹41.26 கோடியில் 92.54 கி.மீ நீளமுள்ள சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல்லில் 73.08 கி.மீ நீளமுள்ள சாலைகளுக்கு ₹60.08 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், புதிய சாலை அமைப்பதுடன், அச்சாலைகளின் 5 ஆண்டு பராமரிப்பிற்கும் ₹58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த வேலைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.