Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஊரடங்கு நீட்டிப்பா? – இன்று முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

ஊரடங்கு நீட்டிப்பா? – இன்று முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது வரை இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன் மாநில முதல்வர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டார் பிரதமர் மோடி.

தற்போது 3வது ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் பொது முடக்கம் நீட்டிப்பது குறித்தும் ஏற்கனவே மத்திய அரசு 17 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இன்று முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அமைச்சரவை செயலாளர், அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் அதன் நீட்சியாக இன்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெற இருக்கிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் எந்த அளவு இருக்கிறது, அதற்காக எடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் போன்றவற்றைப் பற்றி விவாதிக்கவிருக்கின்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தெலுங்கானா உள்ளிட்ட சில மாநில முதல்வர்கள் தன்னிச்சையாக மே மாத இறுதி வரையில் ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த முறை நடைபெற்ற பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாம் என்று ஒடிசா மாநில அரசு சார்பில் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவரின் கருத்தை பல்வேறு மாநில முதல்வர்களும் வழிமொழிந்துள்ள நிலையில் இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் எடுக்கவிருக்கும் முடிவுக்காகப் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Exit mobile version