கொரோனா வைரஸ் குறித்து பொது மக்கள் அச்சமடைய வேண்டாம் பிரதமர் மோடி வேண்டுகோள்
சமீபத்தில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இந்தியாவில் அதன் பாதிப்பு இல்லை என்ற ஆறுதலில் இருந்தாலும் தற்போது இந்தியாவிலும் பரவி விட்டது என்ற தகவல் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் 73 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. இதனையடுத்து இந்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசுகளும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து அரசு முழு கண்காணிப்புடன் இருக்கிறது. இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக விசாக்களை தற்காலிகமாக ரத்து செய்வதில் இருந்து பல்வேறு சுகாதார பணிகளை அதிகரிப்பது வரை பல நடவடிக்கைகள் இதில் அடங்கியுள்ளன. எனவே இது குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் போதும்.
மேலும் அடுத்த சில தினங்களுக்கு மத்திய அரசின் எந்த அமைச்சரும் வெளிநாடு பயணம் செய்ய மாட்டார்கள். நமது நாட்டு மக்களும் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வைரஸ் பரவுவதை தடுக்கவும் பொதுமக்கள் பெரிய அளவில் கூடுவதை தவிர்ப்போம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.