நீங்கள் UPI மூலம் பணம் அனுப்புவரா? தொடரும் நூதன திருட்டு! இனி இப்படி செய்யாதீர்
மக்கள் இணையத்தையும் ஸ்மார்ட் போனையும் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் அனைத்து சேவைகளும் அவரவர் உள்ளங்கைகளுக்கு வந்து விட்டது.குறிப்பாக பண பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது.ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு வங்கிகளும் இணையதள வங்கி சேவையை வழங்க ஆரம்பித்தன.இதனால் பண பரிவர்த்தனைக்கு வங்கிக்கு செல்வது ஓரளவு குறைந்தது.
ஏற்கனவே பழக்கத்தில் உள்ள இந்த சேவைக்கு ஒருவரின் வங்கி கணக்கை இணைப்பது என்பது பலருக்கு சிரமமானதாக இருந்தது.இந்நிலையில் தான் UPI என்ற எளிதான முறை செயல்பாட்டிற்கு வந்தது.இந்த வசதியின் மூலமாக ஒருவரின் மொபைல் எண்ணை பயன்படுத்தியே பணத்தை அனுப்ப முடியும்.இந்த சேவையின் மூலமாக ஒரு சில வினாடிகளில் பணத்தை அனுப்ப முடியும்.
இணைய வசதி எந்த அளவிற்கு நமது நேரத்தை சேமிக்க உதவியதோ அதே அளவிற்கு சிக்கலையும் தர ஆரம்பித்தது.நாளுக்கு நாள் இணைய வழியிலான குற்றங்கள் அதிகமாக ஆரம்பித்தது.குறிப்பாக இணைய வழியிலான பண திருட்டு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.வித விதமான முறைகளில் இந்த குற்ற செயல்கள் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் தற்போது நூதன முறையில் UPI முறையை பயன்படுத்தி கொள்ளையடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து சென்னை காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் உங்களது செல்போனில் ஏதாவது வசதியை பெற அல்லது பதிவு செய்ய WALLET ஆப் மூலமாக ரூ.1, ரூ.10 செலுத்துமாறு ஏதாவது இணையதள முகவரி மூலமாக குறுந்தகவலோ, மின்னஞ்சலோ அனுப்பப்பட்டால் கவனமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குறைவான தொகை என நினைத்து போலியான முகப்பில் பணம் செலுத்துவது மூலமாக உங்களது மொத்த பணமும் எடுக்கப்படும். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் சமூக வலைத்தளங்களில் முன்பின் தெரியாத யாருக்கும் பண பரிமாற்றம் செய்து மோசடியாளர்களிடம் சிக்கிவிடக் கூடாது என்றும் அந்த அறிவிப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா காலத்தில் பெரும்பாலோனோர் வங்கிக்கு செல்வதை தவிர்த்து இணைய வங்கியை பயன்படுத்தி வரும் சூழலில் இந்த மாதிரியான நூதன திருட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.