வீட்டிலிருந்தே நிலவுக்கு சென்ற அதிசயம்!
இளைஞர்களின் புது அவதாரம் மூன் செல்ஃபி..!!
21 ஆம் நூற்றாண்டில் இளைஞர்களின் வாழ்க்கையில் செல்ஃபி இல்லாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு செல்பி மோகம் பரவி வருகிறது. தன்னை பல்வேறு விதமாக செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டு பலர் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இன்றைய கால இளைஞர்கள் தனக்கான விளம்பரத்தை அதிகம் விரும்புகிறார்கள். இதற்கு வழிகாட்டியாய் சமூகவலைதளங்கள் இருக்கின்றன. அரசியல், சமூகம், சமூக பிரச்சினை போன்ற பல்வேறு கருத்தை சமூக வலைதளங்கள் பிரதிபலித்தாலும், அதில் செல்பி பதிவுகள் தனித்துவமாக இடம்பெறுகின்றன.
தற்போதைய சூழலில் இணையவாசிகள் நினைத்தால் எதையும் டிரெண்ட் செய்யக்கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. அந்த வகையில் சில தினங்களாக “மூன் செல்ஃபி” என்கிற புது வகையாக செல்பி மோகம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கழிவறை காகிதம் அல்லது ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்து உருளையாக சுற்றி, அந்த உருளைக்கு நடுவே தனது முகத்தை வைத்து செல்ஃபி எடுத்து வருகிறார்கள். இதற்கு மூன் செல்ஃபி என்றும் புதிய வகையில் பெயர் வைத்துள்ளனர்.
இந்த புதிய கேளிக்கையின் வழியாக வீட்டிலிருந்தே நிலவுக்கு சென்ற அதிசயத்தை பலர் நிகழ்த்தி வருகின்றனர். இதை பார்க்கும்போது நிலவில் இருந்து புகைப்படம் எடுத்தது போல் உள்ளது. கடந்த காலங்களில் செல்ஃபி மோகத்தால் உயரமான இடங்கள், ரயில்வே தடங்கள் மற்றும் சாலைகளில் விபத்துகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருந்தே எடுக்கும் மூன் செல்ஃபியால் எந்த பிரச்சினையும் வராது என்று உறுதியாக கூறலாம்.