Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா தொற்றால் பாதித்த 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் குணமடைந்துள்ளனர்.. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா காலத்திலும் அரசு மருத்துவமனைகளில் இதர மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 542 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இதேப்போல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 372 குழந்தைகளும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெற்றோர்களுடன் அனுமதிக்கப்பட்ட 30 குழந்தைகளும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்களின் தொடர் சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளனர்.

சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் கூடிய 455 குழந்தைகள், இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட 25 குழந்தைகள், இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகள், பிறவி இருதய குறைபாட்டுடன் பிறந்த 3 குழந்தைகள், சிறுநீரக கோளாரால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகள், நிமோனியா பாதித்த 8 குழந்தைகள், பிறவி குறைபாடுடன் பிறந்த 5 குழந்தைகள், குடல்வால் உள்ளிட்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 குழந்தைகள் மற்றும் தீவிர தொற்றுடன் பாதிக்கப்பட்ட 10 பச்சிளம் குழந்தைகள் அனைவரும் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு மொத்தம் 944 குழந்தைகளுக்கு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

இதனைத் தவிர தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 45,222 குழந்தகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version