பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்த முறைகேடுகளை மறைப்பதற்காகவே எனது வீட்டில் சோதனை! முன்னாள் அமைச்சர் பேச்சு!!

0
169

பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்த முறைகேடுகளை மறைப்பதற்காகவே எனது வீட்டில் சோதனை! முன்னாள் அமைச்சர் பேச்சு!!

முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக அவர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கே.பி.அன்பழகனின் மனைவி, அவருடைய மகன்கள் மற்றும் மருமகள் உள்ளிட்டோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறி அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கே.பி.அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான, நெருக்கமான இடங்களில் சோதனை நடத்தினர். நேற்று காலை 6.30 மணி முதல் இரவு 9.45 மணி வரை சோதனை நடந்தது. தொடர்ந்து கே.பி.அன்பழகனின் உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் 2 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கப் பணமும், 7 கிலோ தங்க நகைகளும், 14 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டது. இதில் ஊழல் தொடர்பான முக்கியமான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கணக்கில் வராத சுமார் இரண்டரை கோடி ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தி.மு.க. அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் அறிவித்த 21 பொருட்களையும் சரியாக வழங்காமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி முறைகேடு செய்துள்ளது. எனவே அவர்கள் செய்த இந்த 500 கோடி ரூபாய் ஊழலை மறைப்பதற்காகவும், மக்கள் மத்தியில் இருந்து அதை திசைதிருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு தி.மு.க. அரசு எனது வீட்டில் சோதனை நடத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.