கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்து தயாரிப்பாளர் சங்கத்தை முடக்கிய தமிழக அரசு, தற்போது நடிகர் சங்கத்துக்கும் தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்துள்ளது. தனி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள கீதா என்ற பெண் அதிகாரியின் கட்டுப்பாட்டில் தான் இனி நடிகர் சங்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்கள் கூறிய போது ’தனி அதிகாரிக்கு நாங்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, மேலும் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பையும் அனைத்தையும் செய்து கொடுப்போம். இந்த பிரச்சினை தொடர்பாக நாங்கள் முதலமைச்சரையும் செய்தித் துறை அமைச்சரையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். நாங்கள் சட்டரீதியாகவும் ஜனநாயகத்துடன் தேர்தலை எதிர்கொண்டோம். இனிமேலும் சட்ட ரீதியாகத்தான் செயல்படுவோம் என்று கூறினார்
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பூச்சிமுருகன் பதில் கூறிய போது ’சிறப்பு அதிகாரி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளோம். நான்கு பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 3000 பேர் உறுப்பினராக கொண்ட சங்கத்திற்கு ஒரு தனி அதிகாரியை நியமித்து உள்ளது சரியான நடவடிக்கை அல்ல. ராதாரவி காலத்தில் சங்கத்தில் பல குளறுபடிகள் இருந்தபோது இந்த நடவடிக்கையை ஏன் அப்போதைய அரசு செய்யவில்லை’என்று கேள்வி எழுப்பினார்
மேலும் நடிகர் சங்கம் கடந்த சில மாதங்களாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அனைவருக்கும் பென்ஷன் சென்று கொண்டிருந்தது என்றும், எனவே சங்கம் செயல்படவில்லை என்று கூறுவது தவறு என்றும் கூறினார்.