Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உன்னத நாகம்மன் கோவில் திண்டுக்கல்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருக்கிறது அழகிய நாகம்மன் கோவில் இங்குள்ள மக்களுக்கு வேண்டிய வரம் கொடுத்து காத்தருள்கிறாள் அன்னை நாகம்மாள். இதனால் நாள்தோறும் இங்கு வந்து அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். வேடசந்தூர் மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கே மக்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கிறார்கள்.

சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் இந்த கோவில் தோன்றியது ஆரம்பத்தில் இந்த கோவில் விநாயகர் கோவிலாகத்தான் இருந்தது. ஒரு முறை இந்த கோவிலிலிருந்த விநாயகர் சிலை திருடு போனது. அதன் பின்னர் இந்த கோவில் கருவறையில் புற்று வளர தொடங்கியது.

தொடக்கத்தில் இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. அதன் பிறகு இங்கே நாகம் காட்சி கொடுத்தது அதிலிருந்து மக்கள் கோவிலில் வழிபடத் தொடங்கினார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதன் பிறகு அம்மன் அருள் வந்து நாகமனாக இங்கே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்கு கூறினார். அன்றிலிருந்து நாகம்மனை பக்தர்கள் வழிபடத் தொடங்கினார்கள்.

வேண்டியதை நிறைவேற்றி பக்தர்களின் துன்பங்கள் அனைத்தையும் போக்கி அருள் வழங்கி காத்தருளுகிறார் அண்ணை நாகம்மன். இங்கே மூலவராக நாகம்மன் அருள் பாவிக்கிறார். அம்மன் சன்னதியின் வலப்புறம் வலம்புரி விநாயகர் சன்னதி இருக்கிறது.

சன்னதியின் பின்புறம் நாக முனியப்பன் சன்னதி இருக்கிறது, இடப்புறம் லாட சன்னாசி இருக்கிறார். கோவில் முன்பு அக்கினி காளியம்மனுக்கு சன்னதி இருக்கிறது. இங்கே 54 அடியில் பிரம்மாண்ட தோற்றத்தில் அக்னி காளியம்மன் காட்சி தருகிறார். அருகிலே 18ம் படி கருப்பணசாமி வீற்றிருக்கிறார்.

இங்கு அமாவாசை தோறும் துர்கா ஹோமம், பௌர்ணமி தோறும் சண்டி ஹோமம், உள்ளிட்டவை நடக்கின்றன. வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் 3 மணி முதல் 4 மணி வரையிலும், ராகு கால பூஜை நடைபெறுகிறது.

ஏவல், பில்லி ,சூனியம், உள்ளிட்டவற்றை நீக்கும் தெய்வமாக அன்னை நாகம்மன் இருக்கிறார். கோவிலின் தலவிருட்சமாக வேம்பும், அரச மரமும், இருக்கின்றன. தலவிருச்சத்தை சுற்றி வந்து அதில் மாங்கல்யம் கட்டி தொங்கவிட்டால் திருமண தடை நீங்கும்.

திருமணம் கைகூடும், என்பது ஐதீகம். இதன் காரணமாக, ஏராளமான கன்னிப் பெண்கள் இங்கு வந்து அம்மனை வணங்கி தலவிருச்சத்தில் மாங்கல்யம் கட்டி செல்கிறார்கள்.

மறு வருடமே அவர்கள் திருமணமாகி கணவருடன் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்கிறார்கள். கலியுக அதிசயமாக இது நடைபெற்று வருகிறது எனவும் சொல்லப்படுகிறது.

Exit mobile version