Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலக தலைவர்கள் தரவரிசை – முதலிடத்தில் நரேந்திர மோடி

உலக தலைவர்கள் தரவரிசை தொடர்பாக கடந்த ஜூன் மாதம் வெளியான பட்டியலில் 66 சதவீத ஆதரவே பெற்றிருந்த பிரதமர் மோடி தற்போது 70 சதவீத ஆதரவை பெற்று மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவிய தலைமைத்துவ அங்கீகார மதிப்பீட்டாளரான மார்னிங் கன்சல்ட் நிறுவனம், உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாராந்திர அடிப்படையில் தலைவர்களை மதிப்பிட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் எடுக்கப்படும் ஆய்வுகள் மூலம் இந்த மதிப்பீடு வெளியிடப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய 13 நாடுகளின் தலைவர்களுக்கான அங்கீகார மதிப்பீட்டு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில், 2-ம் தேதி நிலவரத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் 70 சதவீத ஆதரவு பெற்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி அவர் முன்னிலையில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் பிற முக்கிய தலைவர்களான ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் (52 சதவீதம்), அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (48 சதவீதம்), ஆஸ்திரேலிய பிரதமர் மாரிசன் (48 சதவீதம்), கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (45 சதவீதம்), இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (41 சதவீதம்) பின்தங்கி உள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாத பட்டியலில் அவர் 82 சதவீத ஆதரவுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது

Exit mobile version