100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு..!! -தமிழக அரசு அறிவிப்பு
நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வை தமிழக அரசு அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் சமூக இடைவெளி கருதி 100 நாள் போன்ற மக்கள் கூடும் வேலைக்கு விலக்கி அளிக்கப்பட்டுள்ளது. இதில் வேலை செய்யும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து கொண்டு சமூக விலகலை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு முன்பு நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாள் சம்பளம் ரூ.229 வழங்கப்பட்டு வந்தது. தற்போது இதனை உயர்த்தும் விதமாக ரூ.256 ஆக உயர்த்தி தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்தகவலை அரசாணை வெளியிட்டு உறுதி செய்ததோடு, ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட்ட தேசிய ஊரக வேலைத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 22 மாவட்டங்கள் அதிகமான கொரோனா பாதிப்பு இருப்பதால் அவை ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரேபிட் டெஸ்ட் போன்ற கொரோனா தடுப்பு மற்றும் ஆய்வு கருவிகள் சீனாவில் இருந்து நேற்று சென்னைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.