Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவம்: நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து

ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவம்: நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து

ஹைதராபாத்தில் நேற்று நடந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து பல்வேறு துறையினர் தங்களது கருத்தை கூறி வரும் நிலையில் நடிகை நயன்தாரா சற்றுமுன்னர் இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று உண்மையான நாயகர்களால் இன்று உண்மையாகியிருக்கிறது. தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள்.

காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்குப் புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராகத் தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்திச் சொல்வேன்.

நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியைப் பெண்களுக்கு சரியானா நியாயம் கிடைத்த நாளாகக் குறித்து வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயம் தரும்.

மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவதும், அன்பு செலுத்துவது, இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்குப் பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்குப் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும்.

எதிர்கால உலகைப் பெண்மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியும்.

இவ்வாறு நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version