நீட் தேர்வு ஒத்திவைப்பு? மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா மத்திய அரசு!
தேர்வுக்கு தயாராகும் நாட்கள் குறைவாக இருப்பதால் இளநிலை நீட் தேர்வை வரும் ஜூலை 17ம் தேதி என்பதிலிருந்து வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.இந்நிலையில் நீட் இளநிலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தேசிய அளவிலான பெற்றோர் சங்கம் (ஐடபிள்யூபிஏ) கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் இதுகுறித்து மேற்கண்ட சங்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான அனுபா வஸ்தவா சஹாய் கூறுகையில் இந்த கல்வியாண்டுக்கான படிப்புகள் வரும் 2023 பிப்ரவரி மாதத்திற்குள் தொடங்காது. பிறகு எதற்காக மாணவர்களை தேர்வில் கலந்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி பலமாணவர்கள் ஒன்றிய கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை என்றார்.
மாணவர்கள் தரப்பில் கூறுகையில், மாணவர்களின் நலன் கருதி தேர்வை குறைந்தது 40 முதல் 45 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். கடந்த ஆண்டு மாணவர்களுக்கு தேர்வை ஒத்திவைத்து உதவி செய்தது போல், இந்த ஆண்டும் மாணவர்களுக்கும் உதவ வேண்டும். வரும் ஜூலையில் தேர்வை நடத்திய பிறகு பிப்ரவரி வரை மாணவர்கள் ஏன் காத்திருக்க வேண்டும். அதனால் தேர்வை ஒத்திவைத்தால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கு வசதியாக இருக்கும்.
இந்தாண்டு ஆகஸ்ட் கடைசி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்திற்கு தேர்வை ஒத்திவைக்க வேண்டும். ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைத்தது போல் நீட் இளநிலை தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். மேலும் நீட் இளநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி கடந்த சில நாட்களாக #JUSTICEforNEETUG என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.