நோய்தொற்றுக்கு சாவுமணி அடிக்கும் வேப்பமரத்தின் சாறு!

0
152

நோய்த்தொற்றை முற்றிலுமாக அழிப்பதற்கான மருந்துகள் தொடர்பாக இன்று வரையிலும் உலகளாவிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.

உலகளாவிய புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மருத்துவ விஞ்ஞானிகள் பலரும் இது தொடர்பான ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

அதோடு சித்த மருத்துவ முறையிலும் இந்த நோய் தொற்றுக்கு எதிரான மருந்துகள் இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அறிவியல் சார்ந்த மருத்துவம் மட்டுமல்லாமல் இயற்கை சார்ந்த மருத்துவத்திலும் இந்த நோய் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் தென்படுகிறதா? என்று பலரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

அவ்வாறு ஒரு ஆராய்ச்சியை கல்கத்தாவிலிருக்கின்ற இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்தி வருகிறார்கள். இந்த ஆராய்ச்சி தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கின்ற தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவை பூர்வீகமாக கொண்டிருக்கின்ற வேப்பமரம் ஒட்டுண்ணி எதிர்ப்பு பாக்டீரியா எதிர்ப்பு வைரஸ் எதிர்ப்பு சக்தியாக ஆயிரக்கணக்கான வருடங்களாக பயன்படுத்தப்படுகிறது. வேப்ப மரத்தின் பட்டை, சாறு, உள்ளிட்டவை மலேரியா, குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்புண்கள் தோல் நோய்கள், உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை வழங்க உதவியாக இருக்கிறது.

தற்போதைய ஆராய்ச்சி வேப்ப மரப்பட்டையின் கூறுகள் பரவலான வைரஸ் புரதங்களை குறிவைக்கும் என்று தெரியவந்திருக்கிறது. சார்ஸ் கோவ் 2 உட்பட வளர்ந்து வரும் நோய் தொற்று வைரஸ்களின் மாறுபாடுகளுக்கு எதிரான வைரஸ் தடுப்பு மருந்தாக செயல்திறன் உள்ளிட்டவற்றை காட்டுகிறது.

இந்த ஆராய்ச்சியை நடத்திய குழுவில் பங்கு வகிக்கின்ற அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மரியால் தெரிவிக்கும்போது நோய்களால் யாராவது பாதிக்கப்படும்போது கடுமையான நோய் ஆபத்தை குறைக்கும் வேம்பு அடிப்படையிலான மருந்தை உருவாக்குவது தான் எங்களுடைய ஆராய்ச்சியின் நோக்கம்.

புதிய உருமாறிய நோய்த்தொற்று வைரஸ்கள் வெளிப்படும் ஒவ்வொரு முறையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து புதிய சிகிச்சை முறைகளை உருவாக்க வேண்டியதில்லை என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.

வேப்ப மரப்பட்டை சாறினை விலங்குகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில் அதில் நோய்தொற்று வைரசுக்கு எதிரான தடுப்பு சக்தி இருப்பது தெரியவந்திருக்கிறது. வேப்பமரப் பட்டை சாறு பல்வேறு பகுதிகளிலுள்ள நோய்த்தொற்று வைரஸின் பைக் புரதத்துடன் இணைக்கப்பட்டு வைரஸ் நுழைவதை தடுக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

வேப்பமரப் பட்டை சாறு கொலராடோ பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள் ஆய்வு கூடத்தில் நோய் தொற்று பாதித்தவரின் நுரையீரல், செல்களில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில் நோய் தொற்று தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று தெரியவந்திருக்கிறது. நோய்தொற்றுக்கு பிறகும்கூட வைரஸ் நகல் எடுப்பதையும், பரவுவதையும், இது குறைக்கிறது என தெரிய வந்திருக்கிறது.

ஆராய்ச்சியின் அடுத்த கட்ட நகர்வு வேப்பமரப் பட்டை சாற்றில் உள்ள குறிப்பிட்ட கூறுகளை கண்டறிவதாகும்.. இந்தக் கூறுகள் சார்ஸ் கோவ்2வின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கபடுவதால் இது உருமாறிய நோய் தொற்றுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நோய் தொற்றை எதிர்த்து போராடுவதற்கான புதிய வைரஸ் தடுப்பு சிகிச்சைகளுக்கு இந்த கண்டுபிடிப்புகள் வழிகாட்டும் என்று அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.