நீட் தேர்வு தொடர்ந்து நடக்கும் தற்கொலைகள்! என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

0
129

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் நுழைவுத் தேர்வு தற்போது வரையில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த தேர்வின் அச்சம் காரணமாக பல மாணவர்களும் இந்த தேர்வை சந்திக்க பயப்படுகிறார்கள்.ஏனெனில் இந்த தேர்வில் முழுக்க, முழுக்க கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுவதால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. என்று சொல்லப்படுகிறது. இந்த பயம் காரணமாக ஏராளமான மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதன் காரணமாக, தமிழகத்தின் பல அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். அதோடு தற்சமயம் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக ஆரம்பம் முதலில் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. அதோடு நேற்றைய தினம் இந்த நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை சட்டசபையில் தாக்கல் செய்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.அந்த சட்ட முன்வடிவு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சாத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவருடைய மனைவி விஜயலட்சுமி இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் கனிமொழி பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் எடுத்திருக்கிறார். பன்னிரண்டாம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு 562 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார் கனிமொழி.

இந்த சூழ்நிலையில், நீட் தேர்வுக்கு தயாராகி வந்த கனிமொழி சென்ற செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி தஞ்சாவூரில் இருக்கின்ற தாமரை இன்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வை எழுதி இருக்கின்றார். ஆனால் நீட் தேர்வு கடினமாக இருந்ததன் காரணமாக தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக, கடுமையான மன உளைச்சலில் இருந்திருக்கிறார் அந்த மாணவி. அவருக்கு அவருடைய தந்தை ஆறுதலும் தெரிவித்து உள்ளார்.இருந்தாலும் இந்த தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்த மாணவி தனிமையில் நேற்று இரவு அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வெளியில் சென்றிருந்த மாணவியின் பெற்றோர்கள் வீடு திரும்பி வந்த சமயத்தில் மாணவி கனிமொழி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி ஆனார்கள். மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இப்படி தொடர்ச்சியாக நீட் தேர்வு காரணமாக, மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவுகள் எடுப்பது பெற்றோர்களிடையே பயத்தை உண்டாக்கி இருக்கிறது. 2017 ஆம் வருடம் அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சார்ந்த அனிதா என்ற மாணவியின் மரணத்தில் தொடர்ந்து இன்று வரையில் அரியலூர் மாவட்டம் கனிமொழி வரையில் ஒட்டு மொத்தமாக 15 மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக, தமிழ்நாட்டில் மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொண்டு வந்திருக்கின்ற ஒரு சூழ்நிலையில், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் 104 என்ற எண்ணை அழைக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது. மாணவியின் தற்கொலைக்கு இரங்கல் தெரிவித்து இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தன்னுடைய அரசியல் நாடகத்தையும், நீட் தேர்வின் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதையும், இனிமேலும் செய்யாமல் நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.

அதோடு மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு உண்மையான நிலை என்ன என்பது இப்போது மக்களுக்கும், மாணவர்களுக்கும், விளக்கமாக கூற வேண்டும் மாணவர்கள் இனி இதுபோன்ற ஒரு முடிவுகளை மேற்கொள்ளாமல் வாழ்க்கையில் எந்த ஒரு தேர்வையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற விதத்தில் உங்களுடைய உற்றார் உறவினர்களின் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.