தீ விபத்தினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் மாணவி ஒருவருக்கு, டயப்பர் அணிந்து நீட் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
வருகின்ற ஐந்தாம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 19 வயது மாணவி ஒருவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அவரின் அந்த மனுவில், தான் தீ விபத்தில் சிக்கியதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும், எனவே நீட் தேர்வின் போது டயப்பர் அணிந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், நீட் தேர்வு எழுதும் போது அதற்கு அனுமதி வழங்க வாய்ப்பில்லை. எனவே அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி அவர்கள், நீட் தேர்வு எழுத வரும் மாணவிகளிடம் வரம்பு மீறிய சோதனைகள் நடத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார்.
மேலும், ஆடை கட்டுப்பாட்டில் மாணவிகள் சானிட்டரி நாப்கின் அணிய அனுமதி வழங்கி இருக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரரின் உடல் நிலையை கருத்துக் கொண்டு அவரின் கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்றுக் கொண்டுள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்று நீட் தேர்வு இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. ஆனால் சர்வர் கோளாறு காரணமாக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் பல இடங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான மாணவர்களுக்கு புகைப்படம், கையெழுத்து இல்லாமல் ஹால் டிக்கெட் பதிவேற்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் விண்ணப்பத்தை தவறாக பதிவு செய்து விட்டார்களோ? என்று கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து தேசிய தேர்வு முகமை தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் சர்வர் கோளாறு காரணமாக இது நடந்திருக்கலாம். விரைவில் இதனை சரி செய்து, முறையான வகையில் ஹால் டிக்கெட் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.