இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு… முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல்

0
189

இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு… முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல்

இலக்கிய பேச்சாளரும் அரசியல் பார்வையாளருமான நெல்லை கண்ணன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

தமிழக இலக்கிய பரப்பிலும் அரசியல் உலகிலும் தனது பேச்சால் கவன்ம் ஈர்த்தவர் நெல்லை கண்ணன். இவரின் மகாபாரத உரைகள் ஆகியவை தமிழ் மக்களிடையே வெகு பிரபலம். தனது கடலலை போன்ற பேச்சால் தமிழ்க்கடல் என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவர். இன்று தனது 77 ஆவது வயதில் நெல்லையில் உள்ள தனது வீட்டில் இயற்கை எய்தினார். இதையடுத்து பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிக்கை வாயிலாக தனது இரங்கலை வெளியிட்டுள்ளார். அதில் “திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் நெல்லை கண்ணன். தமிழ்க் கடல் என்றழைக்கப்படும் நெல்லை கண்ணன், பல்வேறு இலக்கியங்கள் தொடர்பாக சுவைபட பேசுவதில் வல்லவர். காமராஜர், கண்ணதாசன் போன்றோருடன் மிகவும் நெருக்கமாக பழகிய அனுபவம் கொண்டவர். காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டு காலம் உறுப்பினராக இருந்த நெல்லை கண்ணன், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார்.

இந்நிலையில், உடல் நல குறைவு காரணமாக நெல்லையில் உள்ள தனது இல்லத்தில் நெல்லை கண்ணன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கி காமராசர் கதிர் விருது பெற்ற நெல்லை கண்ணன், விழா மேடையிலேயே என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டிப் பேசியதை இப்போதும் நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன். நெல்லை கண்ணன் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் வகையில் 2021ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இலக்கிய அறிவில் செறிந்த பழகுதற்கினிய நெல்லை கண்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்து இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.