கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் – தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட திமுக 

0
205
Kumbakonam District

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் – தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட திமுக

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சியினர், இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்புவதற்காக, கும்பகோணம் கோட்டாட்சியர் எஸ். பூர்ணிமாவிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது:

கும்பகோணம் சோழர் காலத்து தலைநகரமாகவும், கோயில்களின் நகரமாகத் திகழ்ந்து வருகிறது. இந்த ஊர் கடந்த 1868-ம் ஆண்டு கும்பகோணம் ஜில்லாவாக இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. மேலும், தென்னகத்தின் கேம் பிரிட்ஜ் என்றழைக்கப்படும் அரசு கல்லூரி, நவக்கிரஹ கோயில்கள், புராதன சின்னங்கள், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாசி மகாமகம் உள்ளிட்ட உலகப் புகழ் பெற்ற விழாக்கள் மற்றும் வர்த்தகம், பாரம்பரியம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

இதே போல் பெரும்பாலான அரசுத் துறை தலைமை அலுவலகங்களும், பல்வேறு தனியார் வங்கிகளின் தலைமையிடமாகவும், தினந்தோறும் வெளிநாட்டினர், வெளி மாநிலத்தவர்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இங்கு கணித மேதை ராமானுஜம், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் பல தலைவர்கள், அறிஞர்கள் பிறந்த பகுதியாகும். இத்தகைய சிறப்புப் பெற்ற கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனக் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய எதிர்க் கட்சித் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக ஆட்சி அமைந்து 100 நாட்களுக்குள் கும்பகோணத்தை தலைமையிடமாக்க கொண்டு தனி மாவட்டமாக அமைப்போம் என வாக்குறுதி அளித்திருந்தார்.

அவரது வாக்குறுதியை ஏற்று, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய 3 தொகுதி வாக்காளர்கள், அவரது கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள். ஆனால் திமுக பொறுப்பேற்று 600 நாட்கள் கடந்துள்ள நிலையில், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்காதது 3 தொகுதி வாக்காளர்களுக்கு ஏமாற்றத்தையளிக்கிறது. எனவே, 2023-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறும் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவாய் மானியக் கோரிக்கை அல்லது 110 விதியின் கீழ் புதிய மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.