Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா மூன்றாவது அலை தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட புதிய தகவல்!

நோய் தொற்றின் மூன்றாவது அலை எதிர்வரும் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி உள்ளிட்ட மாதங்களில் ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் கடந்த வருடம் மார்ச் மாதவாக்கில் முதல் வாரத்திலும் இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை பிப்ரவரி மாதத்திலும் பரவத்தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாகத்தான் இருந்தது அதிகபட்சமாக கடந்த மே மாதம் 23ஆம் தேதி 36 ஆயிரத்து 184 பேர் இந்த நோயினால் பாதிக்கப் பட்டார்கள்.

அன்றைய தினம் மட்டுமே தமிழகம் முழுவதும் 467 பேர் பலியானார்கள், மறுபடியும் கடுமையான முழு ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துதல் உள்ளிட்டவற்றால் நோய் தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பும் மெல்ல, மெல்ல குறையத்தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பேருந்துகள் இயக்கம், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள், திரையரங்குகள் என்று ஊரடங்கு பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

கேரள மாநிலத்தில் தினசரி பாதிப்பு அதிகரித்து அதன் காரணமாக, அந்த மாநிலத்தை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன தற்சமயம் தமிழ்நாட்டில் 1200க்கு கிருமித்தொற்று எண்ணிக்கை குறைந்து இருந்தாலும் மூன்றாவது அலை எச்சரிக்கையை தொடர்ந்து முகாம்களை நடத்தி மிக விரைவாக தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு முடுக்கி விட்டிருக்கிறது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, நோய்த்தொற்றின் மூன்றாவது அலை ஆரம்பம் ஆகலாம் என்று கணிக்கப்பட்ட செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆரம்பமாகவில்லை தற்சமயம் தீபாவளி பண்டிகையை மையமாகக்கொண்டு நவம்பர் மாதத்தில் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறி இருக்கிறார்கள்.

தற்சமயம் இங்கிலாந்து நாட்டில் ஒரு நாள் நோய் தொற்று பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்திருக்கிறது. சிங்கப்பூரிலும் இந்த நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது, 70 சதவீதம் அளவுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மூன்றாவது அலை பாதிப்பை தடுக்க இயலும் என்று உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உள்ளிட்டவை தெரிவித்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் இதுவரையில் 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 6 கோடி நபர்களில் 68% நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இன்னும் ஒரு வார காலத்தில் 70% என்ற இலக்கு எட்டப்பட்டு விடும் மூன்றாவது அலை தற்சமயம் தொடங்குவதற்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம் எதிர்வரும் வருடம் ஜனவரி மற்றும் பிப்ரவரி உள்ளிட்ட மாதங்களில் இந்த மூன்றாவது அலை ஆரம்பம் ஆக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.. மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததை போல முன்னதாகவே ஆரம்பித்தாலும் தமிழகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது, குழந்தைகளுக்கு என்று தனியாக சிகிச்சை பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது அலையில் ஏற்பட்டது போன்ற பாதிப்பு மூன்றாவது அலையில் இருக்காது ஆகவே மூன்றாவது அலையை பார்த்து பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Exit mobile version