பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாநகரில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது பாரம்பரியமான ஒன்றாகும். இந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 14 ஆகிய நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் துறை ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளை உரிமையாளர்களுக்கு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தங்களுடைய காளைகளை போட்டிக்காக அழைத்து வருபவர்கள் போலியான டோக்கன்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுரை மாநகர காவல் துறை விதித்த புதிய விதிமுறைகள் :-
✓ காளைகளை அழைத்து வரக்கூடிய உரிமையாளர் மற்றும் அவருடன் வரக்கூடிய ஒரு நபர் சரியாக காலை 5 மணிக்கு வரவேண்டும்.
✓ முல்லை நகரில் காளைகளை எங்கு அனுமதிக்கின்றனரோ அங்கு வரிசைப்படுத்தி முறையாக வழிநடத்தல் வேண்டும்.
✓ அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு 1100 காளைகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
✓ 1 முதல் 100 வரையிலான டோக்கன்களை பெற்றவர்கள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் போட்டி நடக்கும் இடத்திற்கு வர வேண்டும்.
✓ இவ்வாறு ஒரு மணி நேரத்திற்கு 100 காளைகள் வீதம் மாலை 4 மணி வரை 1100 காளைகளையும் அவிழ்த்து விட முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ முக்கியமாக காளையுடன் வரக்கூடிய காளையின் உரிமையாளர் மற்றும் அவருடன் வரக்கூடிய ஒரு நபர் என இருவரும் கட்டாயமாக மது அருந்தி இருக்கக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.