மத்திய அரசு பணிக்கான தேசிய பணியாளர் தேர்வு முகமைக்கு புதிய தளர்வு களுக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுப் பணி, வங்கிப் பணிகளுக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பிக்கின்றனர். அதில் 1.25 லட்சம் பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த பணிக்கான தேர்விற்கு பல்வேறு தேர்வாணையங்கள் மற்றும் பலவகையான தேர்வுகளில் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பங்கேற்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் இந்த தேர்வுகள் அனைத்தையும் ‘பொதுத் தகுதி தேர்வு’ என்ற ஒற்றை தேர்வில் பங்கேற்பதன் மூலம் சிரமங்களை தவிர்க்கலாம். இதனை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இந்தப் புதிய திட்டத்தின்படி மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், பொதுத் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டால், அடுத்த மூன்று வருடங்களுக்கு அரசாணை அற்ற முறையில் அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாணவர்களுக்கான வேலைச் சிரமமும், மூளைச் சுமையும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறை திட்டத்திற்கு மத்திய அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.