அமளியின் நடுவே நிறைவேற்றப்பட்ட இரு முக்கிய மசோதாக்கள்!

0
162

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் இரண்டு அவைகளையும் எதிர்க்கட்சிகள் நடத்த விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதிலும் பெகாசஸ் செயலின் மூலமாக இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 300 நபர்களுக்கு மேல் இருப்பவர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு அவர்களின் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இதனால் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளும் எதிர்க்கட்சியினர் அமளியில் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியவுடன் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை மற்றும் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எதிர்கட்சிகள் உடனடியாக பெகாசஸ் விவகாரம் தொடர்பாக அவையில் விவாதம் செய்ய வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டார்கள் இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டு மணிக்கு ஆரம்பித்த மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திவால் நடைமுறை சட்ட திருத்த மசோதாவை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். பயிறு வகைகளுக்கான அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் நன்மை அடைவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

அந்த சமயத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு அதன் காரணமாக, அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு 3 மணி அளவில் ஆரம்பித்த மக்களவையில் தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் வேளாண்மை சட்ட மசோதா விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பின் மூலமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தற்போது நிறைவேற்றப்பட்ட இருக்கும் இந்த மசோதாவின் மூலமாக தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அரியானா மாநிலத்தில் இருக்கின்ற தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனம் உள்ளிட்டவற்றுக்கு அதிகபட்சமாக அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் இந்த நிறுவனங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் புதுமையான தொழில் படிப்புகளை அறிமுகம் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல நிறுவனங்களின் திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஆக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு இருந்த சமயத்திலேயே 2 முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது கடுமையான கண்டனத்திற்கு உரியது என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் கடுமையான எதிர்ப்பு முன் வைக்கப்பட்டிருக்கிறது.